நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணவதி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் சுந்தரர் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்வதற்காக குணசேகரன் கடந்த மாதம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு மனு செய்துள்ளார்.
இந்த நிலத்திற்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்வதற்காக ரூ.4,000 லஞ்சமாக தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் லோகாம்பாள் குணசேகரனிடம் கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட குணசேகரன், லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி கிராம நிர்வாக அலுவலர் லோகாம்பாளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு லஞ்சப் பணம் ரூ.4,000 கொண்டு வந்திருப்பதாக கூறினார். அவர் பரமத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்கும்படி கூறியதை அடுத்து குணசேகரன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் தனது உதவியாளர் கீதாவிடம் பணத்தை கொடுத்து செல்லுமாறு கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார். இதனையடுத்து, அலுவலரின் உதவியாளர் கீதாவிடம் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இருவரிடம் விசாரணை நடத்திய பின் கிராம நிர்வாக அலுவலர் லோகாம்பாள் மற்றும் அவரது உதவியாளர் கீதா ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
