மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் சேர தகுதியாக தமிழ்மொழியையும் சேர்த்துள்ளதாக மத்திய தொல்லியல்துறை இணை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீனதயாள் தொல்லியல் கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அறிவிப்பில், சேர்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டமும் அவற்றோடு சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
