கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோரது பின்புலத்தில் முதல்வர் பினராயி விஜயன் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் ஸ்வப்னா சுரேஷ் ஆறு முறை முதல்வரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முதல்வர் பினராயி விஜயன் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதாலா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரோனா பரவலால் கேரளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து 5 முக்கியப் பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலகத்தை நோக்கி நடைபயணமாக வந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்.எம். ஹாசன் மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த சி.பி.ஜான், சிபு பாபி ஜான், டி.வி.இம்ராஹிம் உள்ளிட்டோர் உடன் கலந்துகொண்டனர்.
